உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான மான்.

கண்டமனூர்: தண்ணீர் தேடி வரும் மான்கள் விபத்தில் இறக்கும் பரிதாபம்

Published On 2023-04-02 11:28 IST   |   Update On 2023-04-02 11:28:00 IST
  • 3 தொட்டிகளிலும் குறைந்த அளவிலான மழை நீர் மட்டுமே தேங்கிய நிலையில் பாசிகள் அதிக அளவில் படிந்து துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மான்கள் குடிநீர் தொட்டியில் நீர் அருந்துவதில்லை.
  • கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்து குடிநீர் தேடி வந்த 3 வயது ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளது. இந்த மலையடிவாரத்தின் வழியாக தேனி-வருசநாடு பிரதான சாலை அமைந்துள்ளது.

இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். வெயில் காலங்களில் மலைப்பகுதியில் இருக்கும் சிறு சிறு குளங்களில் நீர் வற்றி விடும். அதுபோன்ற நேரங்களில் மான்கள் குடிநீர் தேவைக்காக இரவில் மலையடி வார த்திற்கு வந்து சாலையை கடந்து அருகே இருக்கும் தோட்டப்பகுதிகளுக்குள் செல்வது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் போது சில நேரங்களில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி மான்கள் தொடர்ந்து பலியாகி வந்தது.

இதனை தடுக்க கடந்த 2019ம் ஆண்டு அய்யனார் கோவில் மலைப்பகுதியில் மான்களின் குடிநீர் தேவைக்காக 3 இடங்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டது. மேலும் சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மான்கள் பலியாவது கணிசமாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொ ட்டிகளில் வனத்துறையினர் முறையாக நீர் நிரப்பி வைக்கப்படுவதில்லை. இதனால் 3 தொட்டிகளிலும் குறைந்த அளவிலான மழை நீர் மட்டுமே தேங்கி காணப்படுகிறது. அந்த நீரிலும் பாசிகள் அதிக அளவில் படிந்து துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மான்கள் குடிநீர் தொட்டியில் நீர் அருந்துவதில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.

இதனால் மலைப்பகுதியில் இருந்து மான்கள் மீண்டும் குடிநீர் தேடி தோட்டப்பகுதிக்கு செல்ல தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்து குடிநீர் தேடி வந்த 3 வயது ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. தகவலறிந்த வனத்துறையினர் புள்ளிமானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து அதன் உடலை அருகே இருந்த வனப்பகுதியில் புதைத்தனர்.

தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மான்கள் பலியாவதை தடுக்கும் வகையில் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து அதில் முழுமையாக நீர் நிரப்பி வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News