உள்ளூர் செய்திகள்

திருமழிசை அருகே கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்க முடிவு

Published On 2022-12-26 09:46 GMT   |   Update On 2022-12-26 09:46 GMT
  • பஸ் நிலையம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட உள்ளது.
  • மெட்ரோ ரெயில் இணைப்பு பயணிகளுக்கு சிறந்த பயணத்தை வழங்க உதவும்.

சென்னை:

சென்னையை அடுத்த திருமழிசை அருகேயுள்ள குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூர் போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 அரசு பஸ்களும், 30 தனியார் பஸ்களும், 36 மாநகர பஸ்களும் நிறுத்தும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1600-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 200 கார்கள், நிறுத்தும் வகையில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் எக்கலேட்டர்கள் குடிநீர் வசதிகள், கழிவுநீர் ஆலை, சி.சி.டி.வி. கேமராக்கள் போன்ற வசதிகளம் உருவாக்கப்படுகின்றன. மேலும் இங்கு மெட்ரோ ரெயில் சேவையும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த பஸ் நிலையத்தில் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இங்கிருந்து பல பஸ்கள் பெங்களூருக்கு இயக்கப்படுவதால் ஐ.டி. ஊழியர்களிடம் இருந்து நல்ல ஆதரவை எதிர் பார்க்கிறோம்.

பலர் வேலை நிமித்தமாக வந்து செல்ல வாய்ப்புள்ளது. இரவு நேர பஸ்களுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே அவர்களுக்கு விருப்பமான உணவு மற்றும் பானங்களை வழங்கும் வகையில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் விரும்பும் வகையில் இந்த உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் இந்த பஸ் நிலையம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட இது விமான நிலையம் போல இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வைஃபை வசதியுடன் பயணிகள் குளிரூட்டப்பட்ட வளாகத்தில் ஓய்வெடுக்கலாம். மேலும் தேவைப்பட்டால் பயணிகள் தங்கள் லேப்டாப்பில் அங்கிருந்த படியே வேலையும் செய்யலாம்.

இந்த பஸ் நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வசதியும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. பூந்தமல்லிக்கு மெட்ரோ ரெயில் இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வந்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் குழுவினர் கடந்த வாரம் குத்தம்பாக்கம் பஸ் நிலையத்தை பார்வையிட்டனர்.

எதிர்காலத்தில் பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்கப்படும்போது அது குத்தம்பாக்கம் பஸ் நிலையம் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் இணைப்பு பயணிகளுக்கு சிறந்த பயணத்தை வழங்க உதவும். மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கு பயணிகளின் ஆதரவு நன்றாக இருக்கும் என்பதால் போக்குவரத்து சேவையும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News