காதல் திருமணம் செய்த ஜோடியை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய குடும்பத்தினர்
- காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் சரமாரியாக தாக்கினர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி. இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த கவினாஸ்ரீ என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2 பேரும் இளங்கலை பட்டதாரிகள்.
இருவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரது அய்யர்சாமி-கவினாஸ்ரீ காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இருவீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் பேசினர். தொடர்ந்து காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் அய்யர்சாமியுடன், கவினாஸ்ரீயை போலீசார் அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து காரில் ஏறிய காதல் ஜோடியை இரு வீட்டாரும் காரிலிருந்து இழுத்து கீழே போட்டு சரமாரியாக தாக்கினர்.
உடனே அங்கிருந்து பொது மக்கள் மற்றும் போலீசார் அவர்களிடமிருந்து காதல் ஜோடியை காப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2 குடும்பத்தினரிடம் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.