உள்ளூர் செய்திகள்

வீடு இடித்து அகற்றப்பட்ட காட்சி.

பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்தில் சர்ச்சைக்குரிய வீட்டை இடித்து அகற்றிய அதிகாரிகள் - உரிமையாளரின் மனைவி தற்கொலை முயற்சி

Published On 2023-09-05 13:21 IST   |   Update On 2023-09-05 13:21:00 IST
  • மேம்பாலப்பணிக்காக நகர்ப்புறத்தில் 29, ஊரக பகுதியில் 72 குடியிருப்புகள் பாலம் அமைக்கும் பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
  • சர்ச்சைக்குரிய வீடு 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடு இடித்து அகற்றப்பட்டது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் பழனி கேட், திருச்சி கேட், கரூர் கேட் ஆகிய 3 ரெயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இந்த பாதையை கடந்த செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து 3 ரெயில்வே தண்டவாளங்களையும் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இப்பணிகள் தொடங்கப்பட்டு நகர்ப்புறத்தில் 29, ஊரக பகுதியில் 72 குடியிருப்புகள் பாலம் அமைக்கும் பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில் முருகவேல் என்பவர் மட்டும் தனது இடத்தை காலி செய்ய மறுத்துவிட்டார். இதனால் பாலம் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்த பின்பும் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் சேவை சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பாலகிருஷ்ணாபுரம், கோவிந்தராஜ்நகர், ராஜக்காபட்டி, ஏர்போர்ட்நகர், சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

முருகவேல் தனது இடத்தை காலி செய்யாமல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது 2 மகன்கள் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அரசு வேலை வழங்கவேண்டும். தான் வசிக்க பட்டாவுடன் கூடிய இடம் வழங்கவேண்டும் என தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது. சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னரும் முருகவேல் இடத்தை காலி செய்யவில்லை. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இன்று காலை ஏ.டி.எஸ்.பி வெள்ளைச்சாமி தலைமையில் டி.எஸ்.பி உதயகுமார், தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீடு இடித்து அகற்றப்பட்டது. வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி அங்கிருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தி ஜே.சி.பி மூலம் இடித்து அகற்றினர்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முருகவேலின் மனைவி சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தைகள் நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு முருகவேலின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்தில் பிரச்சினைக்குரிய வீடு இடிக்கப்பட்டதால் மீண்டும் இப்பகுதியில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News