உள்ளூர் செய்திகள்

தொடரும் கோடை மழை -கருப்பாநதி அணை பகுதியில் 4.5 சென்டிமீட்டர் மழை பதிவு

Published On 2023-04-26 08:37 GMT   |   Update On 2023-04-26 08:37 GMT
  • சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது.
  • கயத்தாறு பகுதியில் 5.5 சென்டிமீட்டர் மழை பெய்தது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று சாரல் மழை பெய்தது. மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை பகுதியில் பலத்த மழை கொட்டியது.

அங்கு அதிகபட்சமாக 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சேர்வலாறு, பாபநாசம் அணை பகுதிகளில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணை பகுதியில் நேற்று முன்தினம் 5 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், நேற்றும் 2-வது நாளாக பலத்த மழை பெய்துள்ளது. அங்கு 4.5 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகி உள்ளது.

அடவிநயினார், சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் லேசான சாரல் மழை பெய்தது. தொடரும் கோடை மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த காற்று அடித்தது.

கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மதியத்திற்கு பின்னர், வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 5.5 சென்டிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 10 மில்லிமீட்டரும், கடம்பூரில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News