ஆத்தூரில் ரெயில் நிலையம் எதிரே தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
- அனைவரும் கைது செய்யப்பட்டு ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
- மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக சங்ககிரியில் ரயில் மறியல் நடைபெற்றது.
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும் சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று ரெயில் மறியல் போராட்டத்திற்காக காமராஜர் சிலையிலிருந்து, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.
ரெயில் நிலையத்தில் உள்ளே செல்ல முயன்ற அவர்களை, ஆத்தூர் டி.எஸ்.பி நாகராஜன் தலைமையினான போலீசார், தடுத்து நிறுத்தனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ரெயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் சேலத்தில் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ரயில்மறியல் நடைபெற்றது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக சங்ககிரியில் ரயில் மறியல் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.