உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் வீடுகளுக்கு வழங்க கூடிய குடிநீரை விவசாய நிலங்களுக்கு விற்பதாக புகார்

Published On 2023-02-13 14:59 IST   |   Update On 2023-02-13 14:59:00 IST
  • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • குடிநீரை குடிநீராக மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர் மலை மற்றும் கல்லட்டி பகுதிகளுக்கு இடைப்பட்ட விவசாய நிலங்களில், பிரதம மந்திரியின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வந்தது.

தற்போது பணிகள் முடிவடைந்து, அழகர் மலைப்பகுதிக்கு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் வழங்குவதில்லை.

மாறாக இப்பகுதியில் பணிபுரியும் குடிநீர் பம்பு ஆபரேட்டர்களின் உதவியுடன் பைக்காரா கூட்டு குடிநீர் திட்ட குடிநீர், விவசாய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் எடுப்பதால் அழகர் மலை பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை என அழகர் மலை பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் குடிநீரை குடிநீராக மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கோடைகாலம் நெருங்கிவரும் இந்த நேரத்தில் குடிநீர் இப்படி விவசாய நிலங்களுக்கு அனுமதி இன்றி பயன்படுத்துவது பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News