தொட்டப்பனூரில் நுண்ணூர் பாசனம் அமைத்து சாமந்தி பூ செடிகள் உற்பத்தியை பார்வையிட்ட கலெக்டர் பாசன வசதிகள், செடி நடவு பணிகளை கலெக்டர் சரயு பார்வையிட்டார்.
வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
- தொட்டப்பனூரில் நுண்ணூர் பாசனம் அமைத்து சாமந்தி பூ செடிகள் உற்பத்தியை பார்வையிட்ட கலெக்டர் பாசன வசதிகள், செடி நடவு பணிகளை பார்வையிட்டார்.
- மத்திகிரி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தளி ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1 கோடியே 85 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதை கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் சூளகிரியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஓசூர் ஒன்றியம் பூனப்பள்ளியில் மானியத்தில் ஜெர்பரா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர்பாசனம் அமைத்து பட்டர் ரோஸ் பயிரிட்டுள்ளது. செடி நடவு பணிகள், மலர் சாகுபடி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் தளி ஒன்றியம் தொட்டப்பனூரில் நுண்ணூர் பாசனம் அமைத்து சாமந்தி பூ செடிகள் உற்பத்தியை பார்வையிட்ட கலெக்டர் பாசன வசதிகள், செடி நடவு பணிகளை பார்வையிட்டார்.
மேலும் ஆருபள்ளியில் தோட்டக்கலைத்துறை மூலம் டிராகன் பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்ட கலெக்டர், டிராகன் பழ பராமரிப்பு பணிகள், சாகுபடி மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, தளி கொய்மலர் மகத்துவ மையம் மற்றும் அலங்கார தாவரங்கள் உற்பத்தி கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து தளி ஒன்றியம் சங்கேப்பள்ளி கிராமத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம் மற்றும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனையும், அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் உணவுகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மத்திகிரி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 5 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 460 மதிப்பில் விவசாய இடு பொருட்களை கலெக்டர் சரயு வழங்கினார்.
இந்த ஆய்வின் போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, இந்தோ&இஸ்ரேல் கொய்மலர் சாகுபடி மைய திட்ட அலுவலர் ஆறுமுகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் சரவணன், ஜெனிபர், சிவசங்கரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.