உள்ளூர் செய்திகள்

கோவை எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

Published On 2023-04-07 09:14 GMT   |   Update On 2023-04-07 11:32 GMT
  • திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
  • இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

கோவை,

கோவை பட்டணம் அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது23).

இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டணம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் யோகேஸ்வரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரிடம் பேசுவதையும் தவிர்க்குமாறு கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் காதல்ஜோடியினர் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் தங்களை சேர விடமாட்டார்கள் என நினைத்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி சம்பவத்தன்று காதல் ஜோடியினர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரியவரவே பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்களான பாலாஜி, யோகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

மனுவில், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மிரட்டலும் விடுக்கின்றனர். எங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News