உள்ளூர் செய்திகள்

சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவ சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2023-04-20 14:07 IST   |   Update On 2023-04-20 14:07:00 IST
  • தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் அவர்கள் நினைத்தார்.
  • தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார் அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங்கிற்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது.

ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம். சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, பி.பி. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணி இடங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங்.

தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் அவர்கள் நினைத்தார். தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார்.

'ஒரு மனிதனுக்குச் சாவை விட மிகக் கொடுமையானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் 'சுயமரியாதை' என்று சொன்னவர் வி.பி.சிங். தலைவர் கலைஞரை சொந்த சகோதரனைப் போல மதித்தார்.

'எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, லட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர்' என்று பாராட்டியவர் வி.பி.சிங்.

1988-ம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது, மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரித்து அணிவகுத்த வீரக்காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங். அவர் பிரதமர் ஆனபின்னர், டெல்லி சென்றோம்.

சட்டமன்றக் குழுவோடு நானும் சென்றேன். அப்போது என்னை அவரிடத்தில் அறிமுகப்படுத்தினார்கள். 'இவரை எனக்கு அறிமுகப்படுத்துகிறீர்களா? இவரை எனக்குத் தெரியாதா? நீங்கள்தானே சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தினீர்கள்!' என்று சொன்னது, என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.

அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின் உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூக நீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங் அவர்கள். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங்.

சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில், தலைவர் கலைஞருடைய வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்கு தமிழ் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு, இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

உயர் வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த, எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத, டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங்கின் புகழ் வாழ்க, வாழ்க, வாழ்க என்று கூறி அமர்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News