உள்ளூர் செய்திகள்

போலியான கண் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்த மாநகர பஸ் டிரைவர்கள்- அதிகாரிகள் விசாரணை

Published On 2023-06-15 11:13 GMT   |   Update On 2023-06-15 11:14 GMT
  • அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
  • சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சென்னை:

சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். மாநகர பஸ்களில் டிரைவராக பணியாற்றும் 40 வயது மற்றும் அதற்குமேல் வயது உள்ள டிரைவர்கள் ஆண்டுதோறும் தங்களது கண்பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட பணிமனையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்காலிக கண்பார்வை பிரச்சினை மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்களுக்கு இதன் மூலம் எளிதான மாற்றுப் பணிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வழக்கமான பஸ் ஓட்டும் பணியை தவிர்ப்பதற்காகவும், அதற்கு மாற்றாக எளிதான வேலைக்கு செல்லவும் 8 மாநகர பஸ் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது. அவர்களில் அண்ணா நகர் பஸ் டெப்போவில் பணியாற்றும் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

அவர் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் கண்பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற போது போல் போலியான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளார். இதில் அந்த சான்றிதழில் பரிசோதனை செய்ததாக கூறப்பட்ட பெயர் கொண்ட டாக்டர்கள் அங்கு பணியிலேயே இல்லை என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதே போல் மற்ற பணிமனைகளிலும் டிரைவர்கள் போலியான கண்பரிசோதனை அறிக்கை வழங்கி எளிதான வேலைக்கு மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் டிரைவர் பணியை தவிர்த்து மற்ற வேலைக்கு மாற்றப்பட்டவர்கள் சமர்ப்பித்த டாக்டர்களின் பரிசோதனை அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News