உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை சாவு: ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபருக்கு வலை

Published On 2023-10-15 07:46 GMT   |   Update On 2023-10-15 07:46 GMT
  • பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை சில மணிநேரத்திலேயே இறந்து விட்டது.
  • தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த வாலிபர் சிறுமியிடம் அத்துமீறி பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் 10ம் வகுப்பு படித்து வரும் சமயத்திலேயே அவர் கருவுற்றார். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுமி கருவுற்றிருந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட வாலிபரிடம் கேட்ட போது திருமணம் செய்து கொள்வதாக கூறி பின்னர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் சிறுமியின் கருவை கலைக்க முடியாததால் அவருக்கு நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில மணிநேரத்திலேயே அது இறந்து விட்டது. இதனிடையே 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி கற்பழித்த வாலிபர் விவரம் கேட்டபோது நடந்தவற்றை அவர் கூறியுள்ளார்.

பின்னர் வடமதுரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல மைனர் பெண்கள் கருவுற்று பின்னர் கலைக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. சமரசம் செய்து திருமணம் நடத்தி வைக்கலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தால் அந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுகிறார். இதனால் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வாலிபர்கள் திருமணத்திற்கு மறுத்து தப்பியோடி விடுகின்றனர்.

சமூக நலத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வயது திருமணம், போக்சோ குறித்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News