கன்னியாகுமரியில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார்
- சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
- சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போ தைய முதல்-அமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார்.
அவர் மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்தினை பார்வையிடுகிறார். அதன் பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்கிறார்.
தொடர்ந்து திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைத்து ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதன் பிறகு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அவர், திருவள்ளுவர் பாதமலருக்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு மற்றும் வீடியோ படக்காட்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் அக்காட்சி நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் நடைபெறும் சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார். திருக்குறளால் அதிகம் நன்மை பயப்பது தனி மனி தருக்கா? சமுதாயத்திற்கா? என்ற தலைப்பில் இந்த பட்டிமன்றம் நடக்கிறது.
தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசு கின்றனர். சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் பேசுகின்றனர்.
மறுநாள் (31-ந்தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா பந்தலுக்கு வருகிறார். விழாவில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகிறார். இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைர முத்து உள்ளிட்டோர் பேசு கின்றனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்ன ரசு தலைமையில் கருத்த ரங்கம் நடைபெறுகிறது. சமகாலத்தில் வள்ளுவர் என்ற தலைப்பில் பேரா சிரியர் கருணானந்தன் பேசுகிறார். திருக்குறளும், சங்க இலக்கியமும் என்ற தலைப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் பேசுகிறார்.
வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம் என்ற தலைப்பில் புலவர் செந்தலை நாம் கவுதமன், திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு என்ற தலைப்பில் வக்கீல் அருள்மொழி, வள்ளுவம் காட்டும் அறம் என்ற தலைப்பில் கரு. பழனி யப்பன், திருக்குறளில் இசை நுணுக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரி ஆகியோர் பேசுகின்ற னர்.
மாலையில் அமைச்சர் பெரியசாமி திருக்குறள் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து நினைவு பரிசுகளை வழங்குகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா நன்றி கூறுகிறார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.