உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம்

Published On 2022-08-01 07:49 GMT   |   Update On 2022-08-01 07:49 GMT
  • சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவம் நடைபெற்றது.
  • மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

 சிதம்பரம்:

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீ மாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் ஜூலை 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. தேர், கீழசன்னதி நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதியை அடைந்தது. முன்னதாக நடராஜர் கோவிலிருந்து பொதுதீட்சிதர்கள் பிரசாதத்துடன் வந்து பட்டு சாத்தி, மகா தீபாராதனை செய்த பின்னர் தேர் புறப்பட்டது. பின்னர் மாலை ஸ்ரீ்மாரியம்மன் தேரில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்றார். தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர்.

இன்று காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை ஆகியவையும், காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்கும் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 1 மணிக்கும் மேல் 2 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவமும், 3-ந் தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, கலியமூர்த்தி பிள்ளை ஆகியோர் செய்துள்ளனர். தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பேருந்துகள் பஸ்நிலையத்திற்கு செல்ல முடியாததால், தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கடலூர் மற்றும் சீர்காழி மார்க்கமாக செல்லும் பஸ்கள்இயக்கப்படும் என போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 250 -க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News