உள்ளூர் செய்திகள்

சென்னை கடற்கரை பகுதிகள் 'நீலக்கொடி' தகுதியை பெறுகிறது

Published On 2023-01-23 11:57 GMT   |   Update On 2023-01-23 11:57 GMT
  • மெரினா முதல் கோவளம் வரை ரூ.100 கோடியில் 20 கடற்கரைகள் ஒன்றிணைத்து மேம்படுத்தப்படுகிறது
  • கடற்கரை பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடம், விளையாட்டு பகுதி, படகுத்துறை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்படும்.

சென்னை:

டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது.

நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும்.

தற்போது இந்தியாவில் 10 நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன. கோவளம் கடற்கரை இந்த நீலக்கொடி தகுதியை ஏற்கனவே பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், நீலக்கொடி என்ற சர்வதேச சுற்றுச்சூழல் தகுதியை பெறுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இதற்காக கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி சென்னை கடற்கரை பகுதிகளும் மறு சீரமைப்பு செய்து மேம்படுத்தப்படுகிறது. சென்னை கடற்கரை மறுசீரமைப்பு புத்தாக்க திட்டம் தொடர்பாக சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகள் பொதுமக்கள் விரும்பி பார்க்கும் இடங்களாக உள்ளன. சென்னை துறை முகத்தையொட்டிய பகுதியில் அதிக அளவில் மணல் தேங்குவதால் மெரினா கடற்கரையில் மணல் பரப்பு அதிகரித்து காணப்படுகிறது.

அதே நேரத்தில் திருவான்மியூர் கடற்கரையில் கடல் பரப்பு அதிகரித்து காணப்படுகிறது.

கூவம், அடையாறு ஆறுகள் மூலம் கழிவுநீர் கடலில் கலப்பதால் பெரும்பாலான நேரங்களில் கடல்நீர் நுரையுடன் காணப்படுகிறது. சென்னையில் கடற்கரை ஓரமாக 26 மீனவ குடியிருப்புகள் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பை பயன்படுத்தி சென்னை கடற்கரைகள் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்து எண்ணூர் முதல் கோவளம் வரை தொடர் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக சென்னை மெரினா முதல் கோவளம் வரை 31 கி.மீ. தூரமுள்ள 20 கடற்கரைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த கடற்கரைகளை ஒன்றிணைக்கும் வகையில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த கடற்கரைகள் அந்தந்த பகுதியில் உள்ள சுற்றுச்சூழல், வரலாறு, மக்கள் பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளதால் பாரம்பரியம் சார்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரையில் உடல் நலம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தும், நீலாங்கரை, ஆலிவ் கடற்கரையில் சுற்றுச் சூழல் மையம் சார்ந்தும், உத்தண்டி கடற்கரை பகுதியில் கலை மற்றும் கலாசாரம் சார்ந்தும், முட்டுக்காடு, கோவளம் கடற்கரை பகுதியில் நீர் விளையாட்டு சார்ந்தும் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடற்கரை பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடம், விளையாட்டு பகுதி, படகுத்துறை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்படும். மேலும் பாரம்பரிய தாவரங்கள் ஆய்வு திட்டமும் செயல் படுத்தப்படும்.

அதன் அடிப்படையில் மெரினா முதல் கோவளம் வரையான கடற்கரை பகுதி 'நீலக்கொடி' தகுதியை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News