உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை: அறநிலையத்துறையினர் அதிர்ச்சி

Published On 2024-06-28 11:11 IST   |   Update On 2024-06-28 11:13:00 IST
  • மார்கழி 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  • அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில் முனியப்பன் கோவில் பக்தர்கள் காணிக்கையாக வைக்கும் திரிசூலங்கள் உள்ள இடத்தில் அன்னதானம் உண்டியல் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த உண்டியலை மாதத்திற்கு ஒருமுறை பிரித்து காணிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணும் பணி தருமபுரி அறநிலையத்துறை சார்பில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணும்போது அதில் ஒரு காசோலை இருந்ததை கண்டு எடுத்தனர்.

அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.

உடனே காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரன் என்பவர் சவுத் இந்தியன் வங்கிக்கான காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்து இன்று சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என தெரியவரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News