உள்ளூர் செய்திகள்

சிறுமியை மீட்ட வாலிபர் விஜயகுமார்.

பழைய குற்றாலத்தில் 50 அடி பள்ளத்தில் இறங்கி சிறுமியை மீட்ட வாலிபர்

Published On 2022-12-30 11:00 GMT   |   Update On 2022-12-30 11:00 GMT
  • குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.
  • விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுமியை மீட்ட வாலிபருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பது மகன் விஜயகுமார் (வயது24).

இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜயகுமார் தனது காரில் சவாரி ஏற்றிக்கொண்டு பழைய குற்றாலத்திற்கு சென்றார்.

அங்கு காரை நிறுத்திவிட்டு விஜயகுமார் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹரிணி என்ற 4 வயது சிறுமி திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 50 அடி பள்ளத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த விஜயகுமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், கருங்கல் பாறை வழியாக 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார்.

குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.

தன்னுடைய உயிரை பொருட்படுத்தாத 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் விஜயகுமாருக்கு பொது மக்களின் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

தனது உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய அசாத்திய இளைஞர் விஜயகுமாரின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News