உள்ளூர் செய்திகள்

போடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி கேரளாவுக்கு கடத்த முயன்றவர் கைது

Published On 2025-04-17 11:08 IST   |   Update On 2025-04-17 11:08:00 IST
  • தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.
  • கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகில் உள்ள முந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு வேனை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கேன்களில் குடிநீர் கொண்டு செல்வது போல 6 பாட்டில்களில் கள்ளச்சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த கேரள மாநிலம் நெடுங்கண்டம் அருகில் உள்ள பத்துவலவு பகுதியை சேர்ந்த சுகேரியா குரியன் (வயது 52) என்பவரை கைது செய்தனர்.

இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜிதேந்திரகுமார் என்பவரிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை வாங்கி கடந்த பல ஆண்டுகளாக இந்த வியாபாரம் செய்து வந்துள்ளார். காய்ச்சிய சாராயத்தை கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுகேரியா குரியனை கைது செய்து வேனையும் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள ஜிதேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட 7 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News