குந்தாரப்பள்ளியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரியில் பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்
- விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் -ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மாவட்டத்தல் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்து கோவில்களை இடிக்க கூடாது.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சட்ட-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக தி.மு.க., அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேருராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நேற்று பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை அருகில், மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தலைமையில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மகளிர் அணித் தலைவி விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.
அதே போல், குந்தாரப்பள்ளியில் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட பொதுச் செயலா ளர் அன்பரசன் தலைமை யிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியம் மருதேரி பஞ்., பேருஅள்ளியில், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும். போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இந்து கோவில்களை இடிக்க கூடாது. இயற்கை வளங்களை சுரண்ட வேண்டாம். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
அனைத்து விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். மின்கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.