பீட்டர் அல்போன்ஸ் சுந்தரேசபுரத்தில் காங்கிரஸ் கொடியேற்றியபோது எடுத்தபடம்.
ராகுல்காந்தியின் பாதயாத்திரையை பார்த்து பா.ஜ.க.வினர் ஆடிப்போய் உள்ளனர்- கடையநல்லூரில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
- கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
- சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுவதாக பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூரை அடுத்த சுந்தரேசபுரத்தில் சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம். மாதம் ரூ.1000 என்பது ஒவ்வொரு ஏழை வீட்டு பெண்ணிற்கும் எவ்வளவு பெரிய உதவியாகவும், நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை கடந்த சில தினங்களாக என்னிடம் நேரில் பேசிய மாணவிகளின் பேச்சிலேயே நான் அறிவேன்.
தன்னுடைய அன்றாட தேவைக்காக மட்டுமல்ல அத்தியாவசிய தேவைக்காக கூட பணம் கேட்க முடியாத மாணவிகள் இந்தப் பணத்தை தன்னுரிமை பணமாக வைத்துக் கொள்ள முடியும்.
அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார். இந்த உரிமைத் தொகை ஒரு லட்சம் பெண்களுக்கு போய் சேர்கிறது.
ஒரு கட்சி ஆட்சி
ராகுல் காந்தியை மட்டுமல்ல இந்தியாவில் எந்த எதிர்க் கட்சி தலைவர்களையும் செயல்பட விடாமல் முடக்குவது தான் பா.ஜ.க.வின் வேலை. இந்தியா முழுவதும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கி பா.ஜ.க. காய் நகர்த்துகிறது.
காங்கிரஸ் இல்லாத பாரதம், கம்யூனிஸ்டுகள் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு தற்போது சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதை தடுத்து நிறுத்தக் கூடிய மிகுந்த மிக உயர்ந்த பண்பாடுள்ள, உண்மை யுள்ள அரசியல்வாதியாக ராகுல் காந்தி மட்டும் தான் இருக்கிறார்.
பயம் காட்ட முடியாது
மம்தா பானர்ஜி, மாயாவதி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, இவர் களையெல்லாம் பா.ஜ.க. பயம் காட்டலாம். ஆனால் ராகுல் காந்தியை பயம் காட்ட இனிமேல் ஒருவன் பிறந்துதான் வரவேண்டும். ஆகவே அந்த தைரியத்தோடு இருக்கின்ற அவரை முடக்க பார்க்கிறார்கள்.
ராகுலே கூறியிருக்கிறார் 57 மணி நேரம் என்னை விசாரித்து இருக்கிறீர்கள். 5 வருடம் வைத்து விசாரித்தாலும் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தொடங்கிய பாத யாத்திரையை எண்ணி பா.ஜ.க.வினர் ஆடிப்போய் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் வாழப்பாடி ராமசுகந்தன், நெடுஞ்செழியன், ஆலங்குளம் செல்வராஜ், செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்ட நாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.