உள்ளூர் செய்திகள்

1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி இறுதி தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க திட்டம்

Published On 2023-03-15 11:59 IST   |   Update On 2023-03-15 13:39:00 IST
  • பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
  • நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு ஏப்ரல் 6-ந் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிகிறது.

அதன்பிறகு 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஏப்ரல் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தற்போது நாடு முழுவதும் இன்புளூயன்சா எச்3 என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் தகுந்த பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த வைரஸ் காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையும், குழந்தைகளையும் அதிகளவில் தாக்கும் என்பதால் தெலுங்கானா மாநிலத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்குகின்றன.

எனவே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்திருப்பதாலும் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதாலும், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது. 24-ந் தேதி தொடங்க இருந்த தேர்வை ஒருவாரத்துக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 17-ந் தேதியே தொடங்கி 24-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News