உள்ளூர் செய்திகள்

காதலி வேறு திருமணம் செய்து கொண்டதால் தருமபுரி பொறியாளர் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-10-28 15:03 IST   |   Update On 2022-10-28 15:03:00 IST
  • பெங்களூருவில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
  • குன்று மீது தீக்காயங்களுடன் திருமூர்த்தி பிணமாக கிடந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 26). பி.டெக் முடித்துவிட்டு பெங்களூருவில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர் தன்னுடன் வேலை பார்த்த மைசூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் திருமூர்த்தி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை காப்பாற்றி விட்டனர். பின்னர் சில மாதங்களுக்கு பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போதும் அவரை காப்பாற்றிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று சேலத்தில் உள்ள தனது சகோதரிக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டைவிட்டு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் மணியக்காரன்கொட்டாய் என்ற இடத்தில் உள்ள குன்று மீது தீக்காயங்களுடன் திருமூர்த்தி பிணமாக கிடந்தார். அருகே அவரது இருசக்கர வாகனம் இருந்தது.

இதுகுறித்து பாலக்கோடு போலீசில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் திருமூர்த்தி தானே உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அவர் 3-வது முயற்சியில் உயிரிழந்தார்.

Tags:    

Similar News