உள்ளூர் செய்திகள்

நீர்வரத்து சீரானது: மேகமலை அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2025-10-05 13:27 IST   |   Update On 2025-10-05 13:27:00 IST
  • மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
  • தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழை காரணமாக மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இதனை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News