உள்ளூர் செய்திகள்

திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை

Published On 2024-07-17 12:06 IST   |   Update On 2024-07-17 12:06:00 IST
  • அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
  • வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. இதமான குளிர் காற்றும் வீசுவதால் மாவட்டம் முழுவதும் ரம்யமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவும் பரவலாக சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குளிர் காற்று வீசி வருகிறது. தக்கலை, குளச்சல், களியல், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, கொட்டாரம், மயிலாடி உள்பட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் அவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று 1141 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று பேச்சிபாறையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. 516 கன அடி உபரி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் கோதையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் இன்று 2-வது நாளாக அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டு உள்ளது.

மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சேதமடைந்தது. 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.73 அடியாக உள்ளது. அணைக்கு 673 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும் 516 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.87 அடியாக உள்ளது. அணைக்கு 667 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News