உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மீண்டும் உலா வரும் பாகுபலி யானை

Published On 2023-08-08 09:21 GMT   |   Update On 2023-08-08 09:21 GMT
  • வனத்துறையினர் பாகுபலி யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
  • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்தது. இது அங்கு உள்ள விளைநிலங்களை தொடர்ந்து நாசப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் பாகுபலிக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. எனவே அதனை சுற்றி வளைத்து பிடித்து சிகிச்சை அளிப்பது என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். அங்கு வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.

இந்த நிலையில் பாகுபலி யானை திடீரென அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது. எனவே அதனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பாகுபலி யானைக்கு வாயில் இருந்த காயமும் குணமாகி விட்டது. இதனால் அந்த யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் முயற்சியை வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு இருந்தனர்.

கோவையின் அடர்ந்த காட்டுக்குள் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்த பாகுபலி யானை நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமுகை-மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது. இதனை தற்செயலாக பார்த்த வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.

இந்த நிலையில் பாகுபலி யானை நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மெயின் ரோட்டுக்கு வந்தது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி நடமாட்டம் பற்றிய தகவல் காட்டுத்தீயாக பரவியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

இதற்கிடையே வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி யானை நடமாடி கொண்டு இருந்தது. எனவே அவர்கள் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதியில் 2 மாதங்களுக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்து இருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News