உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரி அறக்கட்டளை நிர்வாகி மீது தாக்குதல்: கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- பாளை ஜெயிலில் அடைப்பு

Published On 2023-01-25 14:32 IST   |   Update On 2023-01-25 14:32:00 IST
  • தாக்குதல் நடத்திய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பிரபல தொண்டு நிறுவன நிர்வாகியான பாலகுமரேசன்.

தாக்குதல்

ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக சமூக விரோத செயல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த ஆண்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதில் பாலகுமரேசன் கலந்துகொண்டதால் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் அவர் தனக்கு பாதுகாப்பு தர வேண்டுமென்று போலீசாரிடம் மனு கொடுத்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கும்பல் பாலகுமரேசனை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்ட பாலகுமரேசன் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இவர் மீதான தாக்குதல் வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப் என்ற அந்தோணி பிரதீப் (20), காமராஜபுரத்தை சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ் ரூபன் என்ற பப்பை (19) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் அளித்த அறிக்கையை மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். இதன்படி அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News