உள்ளூர் செய்திகள்

அத்திக்கடவு-அவினாசி திட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா

Published On 2025-02-09 12:16 IST   |   Update On 2025-02-09 12:16:00 IST
  • அன்னூர்-அவினாசி சாலையில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நடக்கிறது.
  • விவசாயிகள், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அழைத்து செல்கின்றனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் ரூ.1,913 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள 1043 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் 93 சதவீத குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி நிதி ஒதுக்கியதுடன், திட்டம் செயல்பாட்டுக்கு வர காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை அன்னூர்-அவினாசி சாலையில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நடக்கிறது.

இன்று காலை 8 மணிக்கு விழா தொடங்கியது. விழா தொடக்கமாக பாராட்டு விழா நடக்கும் இடத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து கார் மூலமாக இன்று மதியம் கோவை வருகிறார்.

அவருக்கு கோவை மாவட்ட எல்லையில் அ.தி.மு.கவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

அவர் செல்லும் வழிகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அவர் காரில் விழா நடைபெறும் அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதிக்கு செல்கிறார். அங்கு அவரை அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கின்றனர்.

அப்போது அவரை விவசாயிகள், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அழைத்து செல்கின்றனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விழா மேடைக்கு செல்கிறார்.

விழா மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், நன்றி தெரிவித்து அவரை பாராட்டுகின்றனர். அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கி அவரை கவுரவிக்கின்றனர். இறுதியாக எடப்பாடி பழனிசாமி விழா பேரூரை ஆற்றுகிறார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் வி.பி.கந்தசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

இதுதவிர கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக 3 மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகளும், பொதுமக்களும் என ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் அன்னூர் கஞ்சப்பள்ளிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த கார் பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, விழா நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கு ஒதுக்கப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக விழா மேடையில் பரதநாட்டியம், கம்பத்து ஆட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை மக்கள் பார்த்து ரசித்தனர்.

முன்னதாக அங்கு விழாவையொட்டி மேடை அமைக்கும் பணிகள் மற்றும் குடிநீர், கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் செய்துள்ளனர்.

விழாவையொட்டி, அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News