நிலத்தை மீட்டுத்தர கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
- நிலத்தை மீட்டுத்தர கோரி பெண் தீக்குளிக்க முயன்றார்.
- கோரிக்கை மனுவை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதிடம் அளித்தார்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லுரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மனைவி செல்வம். தற்போது இவர் அங்கராயநல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர், கேனில் வைத்திருந்த மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
இதைப்பார்த்த போலீசார் அவர் மீது தண்ணிரை ஊற்றி காப்பற்றி, கோரிக்கை குறித்து கேட்டறிந்தனர். அதற்கு செல்வம் தெரிவிக்கையில், எனது தந்தை சிதம்பரம், கடந்த 2011 ஆம் ஆண்டு, வாணத்தி ரையன்பட்டினத்தில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை பொன்பரப்பியைச் சேர்ந்த அலெக்சாண்டர் மனைவி மீனா, உடையார்பாளையம் வெள்ளாழத்தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி தங்கம், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் ,திருச்சி மாவட்டம், கிளியநல்லூரைச் சேர்ந்த ராஜப்பன் மகன் சிவா ஆகியோருக்கு பாத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலத்தை வாங்கிய அனைத்து நபர்கள் மீது கடந்த 2012 முதல் சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கு.வல்லத்தை சேர்ந்த தமிழர் தேசியக் கட்சி தலைவர் சுபா.இளவரசன் தனது 30 அடியாட்கள் மற்றும் ஜேசிபி எந்திரத்துடன் வந்து எனங்களது நிலத்தை அபகரித்து, பிளாட் போட முயன்றார்.
இதனை தடுக்க முயன்ற எனது கணவரையும், என்னையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, செல்வம் தனது கோரிக்கை மனுவை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதிடம் அளித்தார். கோரிக்கையை பரீசிலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.