உள்ளூர் செய்திகள்

ரூ.7.80 கோடி செலவில்புதிய பேருந்து நிலையம்

Published On 2023-02-19 12:05 IST   |   Update On 2023-02-19 12:05:00 IST
கடைகளை காலி செய்ய நகராட்சி நோட்டீஸ்

அரியலூர்,

அரியலூர் நகராட்சியாக கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த நகராட்சியில், 1975ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சுமார் 25 பேருந்துகள் நிறுத்தும் வசதி கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. சுமார் 30 கி.மீ சுற்றளவு பகுதிகளில் இருந்து அன்றாட 10 ஆயிரம் மேற்பட்ட பயணிகள் இந்த பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். 48 ஆண்டுகால பழைய கட்டிடத்தில் 60 கடைகள் ஏலம் விட்டப்பட்டிருந்தாலும், சுமார் 100 கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது,இதனால் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பது அரியலுார் மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை ஏற்று தமிழக அரசும், அரியலூரில் மத்திய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என அறிவித்து, இதற்கென 7.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் உரிமை யாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணி முடியும் வரையில், தற்காலிகபேருந்து நிலையம் அரியலூர் -திருச்சி புறவழிச்சாலையில் உள்ள தனியார் இடத்தில் செயல்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடி ந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News