வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியல்
- வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- நகை கடன் தள்ளுபடி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா கொடுகூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கொடுகூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் நகைக்கடன் பெற்றிருந்தனர்.திமுக தேர்தல் சமயத்தில் வாக்குறுதியாக அளித்த ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நகைகள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டும் நீண்ட நாட்களாக நகை திரும்ப கிடைக்காத நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் அவர்களது நகைகள் திரும்ப கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.தொடர்ந்து வங்கிக்கு நகையை பெறுவதற்காக அலையாய் அலைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.இதனை அடுத்து அங்கிருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.