உள்ளூர் செய்திகள்

அரசு வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-02-07 13:30 IST   |   Update On 2023-02-07 13:30:00 IST
  • அரசு வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

அரியலூர்:

பெரம்பலூர் மாவட்டம், பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 49). இவரது மனைவி பொற்செல்வி(37). இவர்களுக்கு பிரபாகர்(14) என்ற மகனும், பூங்குழலி(12) என்ற மகளும் உள்ளனர். பெரியசாமி அரியலூர் பெரியார் நகர் முதல் குறுக்கு தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் இவர் அரியலூர் கோர்ட்டில் அரசு கூடுதல் வக்கீலாக பணியாற்றி வந்தார். பின்னர் பணியிட மாறுதல் காரணமாக தஞ்சாவூர் கோர்ட்டில் அரசு கூடுதல் வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் பொற்செல்வி தனது சொந்த ஊரான தத்தனூர் பொட்டக்கொல்லைக்கு கோவிலில் பால்குடம் எடுப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை பிரபாகர் விளையாடுவதற்காக வெளியே சென்றார். இதையடுத்து பெரியசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். விளையாடிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பிரபாகர், கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகுநேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டில் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்ட நிலையில் பெரியசாமி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி அறிந்த பொற்செல்வி மற்றும் உறவினர்கள் அங்கு வந்து பெரியசாமியின் உடலை கண்டு கதறி அழுதனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் அங்கு வந்து, ெபரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூடுதல் பணிச்சுமை காரணமாக பெரியசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News