அரசு பஸ்சை சிறை பிடித்து பெற்றோர்கள் போராட்டம்
- அரசு பஸ்சை சிறை பிடித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அரியலூர்:
காயம் கடலூர் மாவட்டம் தொழுதூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர், குடிகாடு, பரவாய் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக அரியலூருக்கும், மீண்டும் இங்கிருந்து அதே வழித்தடத்தில் தொழுதூருக்கும் காலை, மாலை என இருவேளையும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பஸ்சில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழுதூரில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்சில் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். பஸ் பரவாய் கிராமம் சுடுகாடு அருகே சென்றுகொண்டு இருந்தபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய வேகத்தடையில் வேகமாக சென்று ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் பஸ்சில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் நிலைதடுமாறி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும், கம்பியில் இடித்துக்கொண்டும் லேசான காயங்கள் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவ-மாணவிகள் பரவாய் கிராமத்திலேயே இறங்கினர். பின்னர் மாலை வீடு திரும்பி மாணவ-மாணவிகள் நடந்த விவரத்தை தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அரசு பஸ் இதுபோன்று இயக்கப்பட்டால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அதே அரசு பஸ் நேற்று வழக்கம்போல் அரியலூரில் இருந்து தொழுதூருக்கு சென்றபோது பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கூறுகையில், இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறாது என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.