மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சிற்றம்பலம்,மாவட்டக் குழு உறுப்பினர் பி.துரைசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மலர்கொடி, ஆதிலட்சுமி, மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள், மின்சார வாரிய செயற்பொறியாளரை சந்தித்து,இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.