உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ஜமாபந்தி-மாவட்ட கலெக்டர் நேரடி விசாரணை

Published On 2023-06-14 05:53 GMT   |   Update On 2023-06-14 05:53 GMT
  • ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் நேரடி விசாரணை மேற்கொண்டார்
  • மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் நாளில் தா.பழூர் உள்வட்டம், இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்த நல்லூர் உட்பட), தா.பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய 15 கிராம பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இவர்களுக்கு அன்றைய தினமே பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் மீதமுள்ள 260 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இம்மனுக்களை உரிய விசாரணை செய்து தீர்வுகாணவும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கணக்குப் பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் துறை துணை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News