- அரியலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரியலூர்,
தி.மு.க. அரசைக் கண்டித்து அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மணல், கனிம வள கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். கஞ்சா, கள்ளச் சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, அரசு மருத்துவமனைகளாக மேம்படுத்த வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்த கூடாது. மத்திய, மாநில அரசு திட்டங்களில் ஊழல் செய்யக்கூடாது.பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். உணவு பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். மின்வெட்டை தவிர்த்து, மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகர தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் சாரா செயலர் மாரியப்பன் குமார். கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.திருமானூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் காளிராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மண்டலத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதே போல் செந்துறை, கீழப்பழுவூர், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.