உள்ளூர் செய்திகள்

நீதிமன்ற ஊழியருக்கு உரிய காப்பீடு தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-07-02 06:37 GMT   |   Update On 2022-07-02 06:37 GMT
  • தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
  • இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், செந்துறை நீதிமன்றத்தில் பணிபுரியும் பணியாளருக்கு உரிய காப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்துக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்துறையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கட்டளை இளநிலை பணியாளராக பணிபுரிபவர் பழனிவேல்(50). இவர், தனது மனைவி,மகன் என குடும்ப உறுப்பினர் அனைவருக்கும், யுனைடெட் இந்திய காப்பீடு நிறுவனத்தில் குடும்ப நல காப்பீடு செய்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவரின் அறிவுரையுடன் கதிரியக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

தொடர்ந்து சிகிச்சைக்கு செலவான தொகையான ரூ.1,36,361ஐ தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெற உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், காப்பீட்டுத்தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி தராததால், அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பழனிவேல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், பழனிவேலுக்கு காப்பீடு தொகையான ரூ.1,36,361ஐ 30 நாள்களுக்குள் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் உரிய சிவில் நீதிமன்றம் மூலம் 6 சதவீத வட்டியுடன் காப்பீடு தொகையை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News