பேரூராட்சி செயல் அலுவலருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி
- ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் பரபரப்பு
- ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சி சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் மார்க்கெட் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எட்வின் ஆர்தர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் ஒப்பந்ததாரர் பம்பு ஆப்ரேட்டர் ஸ்ரீதருக்கு தரவேண்டிய பழைய பாக்கி தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.ஆனால் இதற்கு செயல் அலுவலர் மருது பாண்டியன் ஒப்புக்கொள்ள மறுத்தார்.இதற்கு கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் கவுன்சிலர்கள் செயல் அலுவலர் தன்னிச்சையாக செயல்படுகிறார். பேரூராட்சி பணிகளுக்கு தடையாக இருக்கிறார்.ஆகவே அவரை மாற்ற வேண்டும் என திடீரென போர்க்கொடி உயர்த்தினர்.பின்னர் பேரூராட்சி பொது நிதியில் கையாடல் செய்து தன்னிச்சையாக செயல்படும் செயல் அலுவலர் மருது பாண்டியன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி தலைவர்,துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.இந்த தீர்மானத்தை பேரூராட்சிகள் உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். பேரூராட்சி கூட்டத்தில் செயல் அலுவலருக்கு எதிராக தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் திடீர் போர்க்கொடி உயர்த்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.