- வணிகவரி துறை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
- பரபரப்பு கடிதம் சிக்கியது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேட்டுதெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சிவகுமார் (வயது 27). இவர் வணிகவரித்துறையில் பணியாற்றி வந்தார்.
இவரின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். தந்தை ராஜவுடன் வசித்து வந்த சிவகுமாருக்கு, திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவந்த சிவகுமார், இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இன்று காலை வெகு நேரமாக எழுந்து வராததால், அவரது தந்தை ராஜா, மகனை எழுப்புவதற்காக சென்றார். அறையின் கதவை திறந்து பார்த்த போது, சிவகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த ராஜா, அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு விசாரணை மேற்கொண்ட போலீசார், சிவகுமாரின் அறையை சோதனை செய்தனர். அப்போது ஒரு கடிதத்தை கைப்பற்றினர். இதில் மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.