தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை பறித்த கொள்ளையன்
- தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை பறித்த கொள்ளையனை தேடிவருகின்றனர்.
- செந்துறை அருகே நள்ளிரவில் துணிகரம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 32). இவர் நேற்று இரவு வீட்டில் தனது கணவருடன் தூங்கிக் கொண்டிந்தார். அப்போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் அவரது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை அறுத்துவிட்டு உள்ளே புகுந்தார்.
பின்னர் வீட்டின் கதவில் இருந்த உள்பக்க தாழ்ப்பாளை திறந்து அறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை விழித்துக் கொண்டு கெட்டியாக தாலிச் சங்கிலியை கையில் பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். உடனடியாக வீட்டில் இருந்த நபர்கள் எழுந்தனர்.
ஆனாலும் அந்த மர்ம நபர் கையில் கிடைத்த தாலிச் சங்கிலியின் ஒரு பகுதியுடன் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.