உள்ளூர் செய்திகள்

கோவையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை - ஐகோர்ட்டில் அண்ணாமலை விளக்கம்

Published On 2022-10-28 13:06 GMT   |   Update On 2022-10-28 13:06 GMT
  • கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
  • பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

சென்னை:

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

இதற்கிடையே, பாரதிய ஜனதாவின் முழு அடைப்பு போராட்டத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முழு அடைப்பு போராட்டம் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை. அதை ஆதரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அக்.31-ல் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News