உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை தாக்கியதாக புகார்: கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் இருக்கும் அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது

Published On 2023-05-19 10:02 GMT   |   Update On 2023-05-19 10:02 GMT
  • கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
  • வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சி:

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ராமநாபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதற்கிடையே இவர் வரன் தேடி திருமண தகவல் மையத்தில் தனது பெயர், விபரங்களுடன் பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் அந்த தகவல் மையம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கார்த்திகாயினி (36) என்பவர் பேராசிரியர் ரமேசுக்கு அறிமுகமானார். தொடர்ந்து செல்போன் எண்களை பகிர்ந்து கொண்ட இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனை காரணமாக கொண்டு ரமேஷ், கார்த்திகாயினி இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இதற்கிடையே அவர்களுக்குள் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாடு உருவானது. ஒருவருக்கொருவர் வசை பாடிக்கொண்டதோடு கார்த்திகாயினி சென்னையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை கற்பழித்துவிட்டதாகவும், தாக்கியதாகவும் கூறியிருந்தார். அந்த வழக்கில் பேராசிரியர் ரமேஷ் தற்போது ஜாமீனில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட அவரும், தனது உறவினர்கள் சிலருடன் திருவெறும்பூர் காட்டூருக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவெறும்பூர் போலீசில் கார்த்திகாயினி புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் இருந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீண்டும் கைதாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News