உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி மையம் கட்டும் இடம் ஆக்கிரமிப்பு: பேரூராட்சி நிர்வாகம் புகார்

Published On 2023-02-25 09:45 GMT   |   Update On 2023-02-25 09:45 GMT
  • அதிகாரிகள் ஆசியுடன் ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் வீடுகள் கட்டியதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது.
  • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட அகரம் ரோட்டில் அண்ணா நகர் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை மாநில அரசால் வழங்கப்பட்டு அதில் நூற்றுக்கணக்கான பயனாளிகள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தை சிலர் அதிகாரிகள் ஆசியுடன் ஆக்கிரமித்து போலி பட்டா மூலம் வீடுகள் கட்டியதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளும் விசாரணை நடத்திய நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மேலும் ஒரு இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா மற்றும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பணியை நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட தனிநபர் தன்னிடமும் அரசால் வழங்கப்பட்ட பட்டா உள்ளதாக கூறி கட்டிடம் கட்டும் பணியை நிறுத்த மறுத்துள்ளார். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பணியை தடுத்து நிறுத்தினர்.

பொது இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் அந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா வைத்துள்ளது குறித்தும் ஏற்கனவே போலி பட்டா மூலம் பொது இடத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் புகார்களையும் உரிய விசாரணை மேற்கொண்டு போலி பட்டா மூலம் பொது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீதும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News