மகா தீப மலையில் தவித்த ஆந்திர பெண்: வனத்துறையினர் மீட்பு
- மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அரசு தடை விதித்தது.
- இரவு முழுவதும் மலையில் தவித்த பெண்ணை வனத்துறையினர் மீட்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த 13-ந் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கடந்த 1-ந் தேதி ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக அண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு வீடு முழுவதுமாக மண்ணில் புதையுண்டது.
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு அண்ணாமலையில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப தரிசன நாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அரசு தடை விதித்தது.
கடந்த காலங்களில் தீப தரிசன நாளில் டோக்கன் முறையில் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு அண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீப தரிசன நாளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அனுமதி இன்றி பக்தர்கள் மலை மீது ஏறாதவாறு காவல்துறை, வனத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலை உச்சிக்கு ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் ஏறினர்.
இதில் ஒரு ஆண் மலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். வழி தெரியாமல் இரவு முழுவதும் மலையில் தவித்த ஒரு பெண்ணை வனத்துறையினர் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மலையில் இருந்து மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்தால் மிகவும் சோர்வாக காணப்பட்டதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.