உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி மிளகாய் பொடி தூவியும், தாக்கியும் 10 பேரை சித்ரவதை செய்து ஆந்திர போலீசார் கொடூரம்

Published On 2023-06-19 14:56 IST   |   Update On 2023-06-19 14:56:00 IST
  • சித்தூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் மீட்டனர்.
  • ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அவர்கள் கண் மற்றும் உடலில் மிளகாய் பொடியை தூவியும், கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா ஒட்டப்பட்டி அருகே உள்ளது புளியாண்டப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்த, குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 10 பேரை கடந்த 11 மற்றும் 12-ந் தேதிகளில் இரவு நேரங்களில் விசாரணைக்காக ஆந்திர போலீசார் அழைத்து சென்றனர்.

திருட்டு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அழைத்து சென்றதாக கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் அளித்தனர்.

அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ் பழங்குடியின குறவன் சங்கம் சார்பிலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் மீட்டனர்.

அவர்களில் 4 பேர் பெண்கள், 2 பேர் சிறுவர்கள், 2 பேர் ஆண்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரியில் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் அவர்கள் கண் மற்றும் உடலில் மிளகாய் பொடியை தூவியும், கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் அதிகாரிகள் நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அங்கு ஏதேனும் பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News