உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி
- துரை மூலைக்கரைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
- லோடு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் துரை படுகாயம் அடைந்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள காரங்காடு, பிள்ளையார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரை (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி மூலைக்கரைப்பட்டிக்கு சென்று விட்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தென்னிமலை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக விறகு லோடு ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் துரை படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்தார். இதுபற்றி அவரது மனைவி இசக்கிலதா (43) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.