கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி வீட்டு வேலை செய்ய சொன்ன அத்தை மகன் கைது
- தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தாத்தா, பாட்டி சிறுமியை பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
- திடீரென தாலி கட்டி, கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்தார். படிப்பு வராததால் பள்ளியை விட்டு நின்று போன சிறுமி வீடடு வேலைகளை செய்து வந்தார். இவரது தாய் சிறுமி குழந்தையாக இருந்தபோதே பாம்பு கடித்து இறந்து போனார். இவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தாத்தா, பாட்டி சிறுமியை பராமறித்து வளர்த்து வருகின்றனர். பிளஸ்-1 வகுப்பிலிருந்து பாதியிலேயே நின்றதால், சிறுமியின் தாத்தா, பாட்டி திருக்கோவிலூரில் உள்ள தனியார் நர்சிங் மையத்தில் சேர்ந்து படிக்க வைத்தனர். 6 மாதத்திற்கு பிறகு சிறுமி அங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் சிறுமியின் உறவினர் மணிகண்டன் (வயது 23), ஏ.சி.மெக்கானிக் பணி செய்கிறார். இவர் சித்தலூர் பகுதியில் உள்ள பெரியசாமி கோவிலுக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது, சிறுமியின் கழுத்தில் மணிகண்டன் திடீரென தாலி கட்டி, கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வீடு மற்றும், விளைநிலப் பணிகளை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து நடந்தவைகளை கூறினார். மேலும், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.