உள்ளூர் செய்திகள்

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்களை படத்தில் காணலாம்.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-03-09 14:26 IST   |   Update On 2023-03-09 14:26:00 IST
  • மாசி திருவிழா கடந்த 1-ந்தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து 4 ரத வீதிகள் வழியாக தேர் இழுத்து வரப்பட்டு மதியம் நிலை வந்தடைந்தது.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் குருவுக்கு அதிபதியானதும், சுவாமி நம்மாழ்வார் அவதரித்த தலமும் ஆகும். இங்கு நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் கிடைத்த நன்னாளை போற்றும் வகையில் ஆண்டு தோறும் மாசி தெப்பதிருவிழா கொண்டாடப்படுகிறது.

கொடியேற்றம்

மாசி திருவிழா கடந்த 1-ந்தேதி நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி யது. அதைத்தொடர்ந்து 13 நாட்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார்.

இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமி நம்மாழ்வார் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளினார். காலை 9 மணி அளவில் ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர், ஆச்சாரிய குருக்கள் சீனிவாசா சேவைகள் அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து கோவிந்தா கோபாலா, கோவிந்தா கோபாலா என கரகோஷத்துடன் 4 ரத வீதிகள் வழியாக தேர் இழுத்து வரப்பட்டு மதியம் நிலை வந்தடைந்தது.

தெப்ப உற்சவம்

நாளை 10-ந்தேதி இரவில் நடைபெறும் தெப்ப உற்சவத்தில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந்தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். 12-ந்தேதி மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

விழாவில் கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் ரங்கராஜன், பேரூராட்சி தலைவி சாரதா பொன்இசக்கி, தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், முன்னாள் நகர செயலாளரும், வடகால் விவசாய சங்க தலைவருமான முத்துராமலிங்கம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், ராஜப்பா வெங்கடாச்சாரி, மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆதிநாதர் ஆழ்வார் கோவில் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News