உள்ளூர் செய்திகள்

சபாநாயகர் அப்பாவு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சீவலப்பேரி தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2022-11-16 09:29 GMT   |   Update On 2022-11-16 09:30 GMT
  • சீவலப்பேரி தொழிலாளி கொலை வழக்கில் போலீசார் 15 பேரை கைது செய்தனர்
  • சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கு அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்

நெல்லை:

பாளை சீவலப்பேரியை சேர்ந்தவர் தொழிலாளி மாயாண்டி( வயது 38). இவர் கடந்த 10-ந் தேதி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாயாண்டியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தனர். அவர்களுடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, உயிரிழந்த மாயாண்டி குடும்பத்தாருக்கு நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

அரசு வேலை

மேலும் மாயாண்டி குடும்பத்தில் ஒருவருக்கும், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட சுடலைகோவில் பூசாரி துரையின் குடும்பத்தில் ஒருவருக்கும் அடுத்த மாதத்திற்குள் அரசு வேலை வழங்கப்படும்.

2 பேர் குடும்பத்தின ருக்கும் பாளை கிருபா நகரில் 3 சென்ட் இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் மாயாண்டியின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

உடல் ஒப்படைப்பு

இந்நிலையில் மாயாண்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க இன்று அவரது உறவினர்கள் வந்தனர். அவர்களிடம் மாயாண்டியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் மாயாண்டியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான சீவலப்பேரியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பலத்த பாதுகாப்பு

இதைத்தொடர்ந்து மருத்துவமனை முன்பு நெல்லை மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரவணன் தலைமையில் சீவலப்பேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. இதற்காக நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் சீவலப்பேரியில் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News