உள்ளூர் செய்திகள்

பூவாயி

சத்துணவு பெண் ஊழியர் கொலையில் 6 மாதத்துக்கு பின் 3 பேர் சரண்

Published On 2022-10-29 09:20 GMT   |   Update On 2022-10-29 09:20 GMT
  • தலைவாசல் அருகே சத்துணவு பெண் ஊழியர் கொலையில் 6 மாதத்துக்கு பின் 3 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
  • சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி (வயது 49) என்பவரிடம் 6½ ஏக்கர் நிலம் வாங்க வெங்கடாசலம் முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக ரூ.82 லட்சம் விலை பேசி ரூ.21 லட்சம் அட்வான்ஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ராமசாமி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்து அட்வான்ஸ் தொகையை வெங்கடாசலத்திடம் திரும்ப கொடுத்துள்ளார். அதன்பிறகு இருவருக்கும் அடிக்கடி நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி இரவு ராமசாமி, அவருடைய அக்காள் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் பூவாயி (66) மற்றும் குடும்பத்தினர் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் பூவாயி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை வழக்கு குறித்து தலைவாசல் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பூவாயி கொலை வழக்கு சம்பந்தமாக தென்குமரை பகுதியை சேர்ந்த வரதன் (வயது 30), முருகேசன் (35), கோபால் (28) ஆகிய 3 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News