கோத்தகிரி அருகே 2 ஆண்டிற்கு பிறகு ஒடேன் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கம்
- பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி அருகே ஒடேன் மற்றும் அதை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களுக்கு கொரோனாவுக்கு முன்பு வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்புக்கு பிறகு பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நடந்தே சென்று வந்தனர்.
மேலும் ஒடேன், ஜக்ககம்பை கிராமத்திற்கு செல்லும் சாலையில் அதிக அளவில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் தங்கள் பகுதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து ஒடேன் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கம் தொடங்கியது.
ஒடேன் கிராமத்தில் பஸ்சிற்கு பூஜை செய்து தொடங்கப்பட்டது. பஸ் உல்லத் தட்டி, ஜக்ககம்பை, ஒடேன் வழியாக கோத்தகிரிக்கு இயக்கப்படுகிறது.
கோத்தகிரியில் இருந்து காலை 6.50 மணி, மாலை 6 மணிக்கு என பஸ் இயக்கப்படுகிறது. பஸ் இயக்குவதற்கு உறுதுணையாக இருந்த கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமனுக்கு கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.
இதில் ஊர் தலைவர் சண்முகம், ஊர் நிர்வாகிகள் காந்தி போஜன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஒடேன் ரவி, ராஜி, ரமேஷ், ஜெயக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.